முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் ஆரம்பித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியை, அவரது அண்ணன் மகன் அஜித் பவார் இரண்டாக உடைத்துவிட்டார்.
பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்ததால் தேசியவாத கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை தேர்தல் கமிஷன் சமீபத்தில் அஜித் பவாருக்கு ஒதுக்கியது. அதேசமயம் சரத் பவாரிடம் புதிய கட்சி பெயர் குறித்து தெரிவிக்கும்படி தேர்தல் கமிஷன் கேட்டு இருந்தது. இதற்காக நேற்று மாலை வரை கால அவகாசம் சரத் பவாருக்கு கொடுக்கப்பட்டு இருந்தது.
அதன் அடிப்படையில் சரத் பவார் தனது புதிய கட்சியின் பெயர் மற்றும் சின்னம் குறித்து தேர்தல் கமிஷனுக்கு கடிதம் கொடுத்து இருந்தார். அதன் அடிப்படையில் சரத் பவாருக்கு தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் என்ற பெயரில் கட்சி பெயரை தேர்தல் கமிஷன் ஒதுக்கி இருக்கிறது. இக்கட்சி பெயர் வரும் 27ம் தேதி நடைபெற இருக்கும் ராஜ்ய சபை தேர்தலுக்கு மட்டும் பயன்படுத்தப்படும்.
மக்களவை தேர்தலுக்கு முன்பு புதிய கட்சியை ஆரம்பித்து சரத் பவார் அணி தேர்தல் கமிஷனில் பதிவு செய்ய கொள்ளலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்திருக்கிறது. தற்போது சரத் பவார் அணிக்கு புதிய சின்னம் ஒதுக்கப்படவில்லை. ராஜ்ய சபைத்தேர்தலுக்கு சின்னம் தேவையில்லை என்பதால் இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை. ஆனால் உதய சூரியன், ஆலமரம், இரட்டை கண்ணாடி ஆகிய சின்னங்கள் பரிசீலனையில் இருக்கிறது. அதோடு தேர்தல் கமிஷனின் முடிவை எதிர்த்து சரத் பவார் அணி விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்போவதாக அறிவித்து இருக்கிறது. எனவே தங்களிடம் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்று கூறி அஜித் பவார் அணி கேவிட் மனு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருக்கிறது.
தேர்தல் கமிஷனின் முடிவு குறித்து கருத்து தெரிவித்த சரத்பவாரின் பேரன் ரோஹித் பவார், ”தேர்தலில் வெற்றி பெற சரத் பவாரின் பெயர் மட்டும் எங்களுக்கு போதும். அவர்கள் கட்சி மற்றும் சின்னத்தை பெற்று இருக்கலாம். ஆனால் கட்சியை ஆரம்பித்தவர் எங்களுடன் இருக்கிறார்” என்றார். முன்னதாக கட்சியின் பெயர் தொடர்பாக தனது ஆதரவாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் தேசியவாத என்ற பெயர் வரவேண்டும் என்பதில் சரத்பவார் உறுதியாக இருந்தார்.
உத்தவ் தாக்கரே கட்சியை ஏக்நாத் ஷிண்டே இரண்டாக உடைத்த போதும் இதேநிலைதான் ஏற்பட்டது. ஏக்நாத் ஷிண்டேயிக்கு கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை கொடுத்துவிட்டு உத்தவ் தாக்கரேயிக்கு சிவசேனா உத்தப் பாலாசாஹேப் தாக்கரே என்று கட்சி பெயர் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.