“ஆளுநரை கட்டுப்படுத்துங்கள்.. இல்லையென்றால்” – மத்திய அரசை எச்சரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஆளுநர் ஆர்.என். ரவியை கட்டுப்படுத்தாவிட்டால் தமிழ்நாடு மக்களின் கோபத்தை மத்திய அரசு சந்திக்க நேரிடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
ஆளுநர் விவகாரம் தொடர்பாக ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள அவர், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் தமிழ்நாடு குறித்து தவறான பிம்பத்தை ஏற்படுத்த ஆளுநர் முயற்சித்ததாக சாடியுள்ளார். சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் ஆளுநர் ரவி அரசியலமைப்புக்கு எதிராக பேசி வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு அரசை சுமுகமாக செயல்படவிடக் கூடாது என்பதே ஆளுநரின் நோக்கம் என்றும், தமிழ்நாடு மக்களின் நலனுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி விளையாடுவதாகவும் விமர்சித்துள்ளார்.
தனது அமைச்சரை நியமிக்கவோ, நீக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறியுள்ள முதலமைச்சர், ஆளுநர் ஆர்.என். ரவியை கட்டுப்படுத்தாவிட்டால் தமிழ்நாடு மக்களின் கோபத்தை மத்திய அரசு சந்திக்க நேரிடும் என்றும் காட்டமாக தெரிவித்துள்ளார்.