ஒட்டாவா; கனடாவில் பார்லிமென்ட் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது.

அண்மைக்காலமாக, கனடாவின் அரசியல் தட்பவெப்பங்கள் மாறி கொண்டே இருக்கின்றன. அந்நாட்டின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ சர்ச்சைகள், கடும் விமர்சனங்கள் இடையே தமது பதவியை ராஜினாமா செய்தார்.

அதன் பின்னர் அவரது லிபரல் கட்சியில் இருந்து மார்க் கார்னி புதிய பிரதமரானார். இந்தாண்டு அக்டோபரில் நடக்க வேண்டிய பார்லி. தேர்தலை, கார்னி பார்லிமென்டை கலைத்து உடனடியாக தேர்தலை அறிவித்தார்.

இதையடுத்து, இந்திய நேரப்படி நேற்று மாலை ஓட்டுப்பதிவு நடந்தது. கிட்டத்தட்ட 3 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை செலுத்தினர். ஓட்டுச் சீட்டு முறையில் தேர்தல் நடந்து முடிந்த உடனயே வாக்குகள் எண்ணும் பணியும் தொடங்கி உள்ளது.

இதுவரை அறிவிக்கப்பட்ட 177 இடங்களில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி 87 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி 75 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கியூபக் கூட்டணி 14 இடங்களிலும், என்.டி.பி., கட்சி ஒரு இடத்திலும் முன்னிலையில் இருக்கிறது.

கனடாவில், கலைக்கப்பட்ட பார்லிமென்டில் 338 இடங்கள் இருந்தன. அவற்றில் ஆளும் கட்சியான லிப்ரல் கட்சி 153 இடங்களை வைத்திருந்தது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியான கன்சர்வேட்டிவ் கட்சித் தலைமையில் 120 உறுப்பினர்கள் இருந்தனர்.

கியூபக் கூட்டணி 33 இடங்களும், என்.டி.பி., கட்சி 24 இடங்களும், பசுமைக் கட்சி இரண்டு இடங்களும் வைத்திருந்தனர். சுயேச்சைகளாக மூன்று எம்பிக்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.