TNEA 2023 எனப்படும் தமிழ்நாடு பொறியியல் கல்லூரி சேர்க்கை கடந்த ஜூலை 22ஆம் தேதி தொடங்கியது. முதலில் 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மானவர்களுக்கு கவுன்சிலிங் நடந்தது. இதையடுத்து மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கான கவுன்சிலிங் நடைபெற்றது. ஜூலை 28ஆம் தேதி முதல் பொதுப் பிரிவினருக்கு கவுன்சிலிங் நடந்தது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
ஆன்லைனில் மூன்று ரவுண்ட் கவுன்சிலிங்கின் முடிவில் கடந்த ஆண்டின் இதே கட்டத்தை ஒப்பிடுகையில், நடப்பாண்டு 10,234 மாணவர்கள் அதிகமாக சீட்டை தேர்வு செய்திருக்கின்றனர். தமிழக பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 1,60,780 சீட்கள் இருக்கின்றன. அதில் மூன்று ரவுண்ட்டுகள் முடிவில் 95,046 சீட்கள் மாணவர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 12 சதவீதம் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.
அரசு பள்ளிகளுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 11,058 மாணவர்கள் சீட் எடுத்துள்ளனர். இதுவரை மொத்தமாக பொறியியல் பாடப்பிரிவில் சீட் எடுத்தவர்கள் எண்ணிக்கை 1,06,104. தற்போது காலியாக இருக்கும் சீட்கள் 54,676 ஆகும். பொறியியல் கல்லூரிகளில் சீட் காலியாக கிடக்கின்றன. மாணவர்கள் பொறியியல் படிப்பை அதிகம் விரும்புவதில்லை. இதன் மீதான மோகம் குறைந்து வருகிறது என்றெல்லாம் பேச்சு அடிபடுவதை பார்க்கலாம்.