அரசியல் பதவி

Feb 7, 2023 | அரசியல்

அதிமுக., கொடி தான்… ஆனா இல்ல! திருச்சி மாநாட்டில் பன்னீர் அணி புதுமை

திருச்சி: பழனிசாமி அணியினரின் எச்சரிக்கைக்கு பயந்து, திருச்சி மாநாட்டில் அ.தி.மு.க.,வின் அங்கீகரிக்கப்பட்ட கொடியை பன்னீர்செல்வம் அணியினர் பயன்படுத்தாமல் தவிர்த்துள்ளனர்.அ.தி.மு.க.,வை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில், முன்னாள் முதல்வர் பழனிசாமி, அக்கட்சியின் பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்டு, அதை தேர்தல் கமிஷனும் அங்கீகரித்துள்ளது.இது பன்னீர்செல்வம் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கர்நாடகா தேர்தலுக்கு பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் வழங்கியதன் மூலம், அ.தி.மு.க.,வை பழனிசாமி முழுமையாக கைப்பற்றி விட்டார் என்ற நிலை உள்ளது.கட்சியை கைப்பற்றும் விஷயத்தில், அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வரும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தரப்பு, திருச்சியில் மாநாடு நடத்தி, பலத்தை நிரூபிக்க திட்டமிட்டுள்ளது.வரும், 24ம் தேதி திருச்சி ஜி-கார்னர் மைதானத்தில் மாநாடு நடத்த முடிவு செய்து, அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.மாநாடு நடக்கவுள்ள மைதானத்தைச் சுற்றி கொடிகள் நடப்பட்டுள்ளன. அந்த கொடிகள் கருப்பு, சிவப்பு நிறத்தில், நடுவே அண்ணாதுரை மற்றும் இரட்டை இலை சின்னம் மேலே உள்ளது போல் உள்ளது. இது அ.தி.மு.க.,வை ஞாபகப்படுத்தும் கொடி என்றாலும், தேர்தல் கமிஷனால் அ.தி.மு.க.,வுக்கு அங்கீகரிக்கப்பட்ட கொடி அல்ல.அங்கீகரிக்கப்பட்ட கொடி என்பது, கருப்பு, சிவப்பு நிறுத்தில், கொடியின் நடுவே அண்ணாதுரை படம் இருக்கும். மாநாட்டில் பன்னீர்செல்வம் தரப்பினர் பயன்படுத்தும் கொடி, அ.தி.மு.க., கொடி போல் தோற்றம் இருந்தாலும், அதிகாரபூர்வ அ.தி.மு.க.,வின் கொடி என்று சொல்ல முடியாது.பழனிசாமி தரப்பினர் கூறியதாவது: பன்னீர்செல்வம் தரப்பினர் அ.தி.மு.க., கொடியை பயன்படுத்தினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுத்துள்ளோம். அதற்கு பயந்து, அங்கீகரிக்கப்பட்ட கொடியை பயன்படுத்தாமல், அதேநேரம் அ.தி.மு.க., கொடி என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் இரட்டை இலை சின்னத்துடன் கூடிய கொடியை பயன்படுத்துகின்றனர்.எதிர்காலத்தில் ஏதும் பிரச்னை என்றாலும், சட்டரீதியாக நாங்கள் அ.தி.மு.க.,வின் அங்கீகரிக்கப்பட்ட கொடியை பயன்படுத்தவில்லை என கூறுவதற்காக, இப்படி முயற்சிக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.