ஸ்ரீஹரிகோட்டா: நிலவை நோக்கிய தனது பயணத்தில் சந்திரயான் 3 விண்கலம் அடுத்த சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. தற்போது சந்திரயான் -3 விண்கலம் புவியில் இருந்து தற்போது 41,603 கி.மீ x 226 கி.மீ சுற்றுப்பாதையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான்-2 என்ற விண்கலத்தை கடந்த 2019 ம் ஆண்டு விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்பு சந்திரயான்-2 2019 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப் பாதையை சென்றடைந்தது. இருந்த போதிலும், தொழில்நுட்பக் கோளாறால் திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது.
அதேநேரம் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து இஸ்ரோ ரூ.615 கோடியில் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்துள்ளது. இந்த விண்கலம் எல்விஎம்-3 எம்-4 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2ஆம் ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14ஆம் தேதி மதியம் 2.35 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது.
சந்திரயான் – 3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், அது தனது இறுதி இலக்கினை அடைய பல்வேறு படிநிலைகளை கடக்க வேண்டியிருக்கிறது. அதாவது, நிலவை நோக்கி இந்தியாவின் சாதனைப் பயணத்தை செய்துகொண்டு இருக்கும் சந்திராயன் 3 விண்கலம் பூமியை நீள் வட்டப் பாதையில் 5 முறை சுற்றி வந்த பிறகு நிலவின் ஆர்ப்பிட்டுக்கு சென்று அதையும் நீள் வட்டப்பாதையில் சுற்றத் தொடங்கி தரையிறங்கும்.
நேற்று வெற்றிகரமாக முதல்முறை பூமியின் நீள் வட்டப்பாதையை சந்திராயன் 3 விண்கலம் சுற்றி வந்துவிட்டதாக இஸ்ரோ தெரிவித்து இருந்தது. விண்கலம் நல்ல நிலையில் இருப்பதாகவும் தற்போது 41762 km x 173 km ஆர்ப்பிட்டில் உள்ளது எனவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சந்திரயான் -3 விண்கலத்தை 2-வது புவிவட்ட சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றிகரமாக முடிந்ததுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சுற்றுப்பாதையை உயர்த்தும் பணி மீண்டும் நாளை மதியம் 2 மணி முதல் 3 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 179 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தப்பட்ட சந்திரயான் – 3 விண்கலம் தற்போது 226 கி.மீ தொலைவிற்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் சந்திரயான் -3 விண்கலம் புவியில் இருந்து தற்போது 41,603 km x 226 km சுற்றுப்பாதையில் உள்ளதாகவும் இஸ்ரோவின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்டு 23 ஆம் தேதி மாலை 5 மணியளவில் நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் -3 விண்கலத்தை தரையிறக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த நிகழ்வை மட்டும் வெற்றிகரமாக நிகழ்த்திவிட்டால் நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு இந்தியா என்ற சாதனையை பெற முடியும். இதனால் இந்த நிகழ்வினை உலக நாடுகள் உற்று கவனித்து வருகின்றனர். ஏற்கனவே அமெரிக்கா, சோவியத் ரஷியா, சீனா ஆகிய நாடுகள் நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை தரையிறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.