புதுடில்லி: ‘மஹா கும்பமேளா என்னும் ஒற்றுமையின் மகா வேள்வி நிறைவு பெற்று விட்டது. நாட்டு மக்கள் 140 கோடி பேரின் நம்பிக்கை, பிரயாக்ராஜில் நடந்த இந்த திருவிழாவில் ஒன்று கூடிய விதம், நம்மை வெற்றிகொண்டு விட்டது,” என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் பிரம்மாண்டமாக நடந்து வந்த மஹா கும்பமேளா நிகழ்ச்சி நிறைவடைந்தது. மொத்தம், 45 நாட்களில் 65 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடினார். இது தொடர்பாக, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மகா கும்ப மேளா நிறைவு பெற்றது. ஒற்றுமையின் மகா வேள்வி நிறைவு பெற்றது. நாட்டு மக்கள் 140 கோடி பேரின் நம்பிக்கை பிரயாக்ராஜில் நடந்த இந்த திருவிழாவில் ஒன்று கூடிய விதம், நம்மை வெற்றிகொண்டு விட்டது. மகா கும்ப மேளா நிறைவு பெற்றதை முன்னிட்டு என் மனதில் தோன்றிய நினைவுகளை எழுத முயற்சிக்கிறேன்.

கும்ப மேளாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது வெறும் சாதனை மட்டுமல்ல, பல நூற்றாண்டுகளாக நமது கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை வலுவாகவும், வளமாகவும் வைத்திருக்க வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது.

இந்த ஒற்றுமைக்கான கும்பமேளாவை வெற்றியடையச் செய்ய நாட்டு மக்களின் கடின உழைப்பு, முயற்சிகள் மற்றும் உறுதியால் ஈர்க்கப்பட்டு, பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் முதல் ஜோதிர்லிங்கமான ஸ்ரீ சோமநாதரை நான் தரிசிக்கப் போகிறேன்.

பக்தியின் அடையாளமாக எனது சங்கல்ப புஷ்பத்தை சமர்ப்பித்து, ஒவ்வொரு இந்தியருக்காகவும் பிரார்த்தனை செய்வேன். நாட்டு மக்களிடையே ஒற்றுமையின் இந்த தடையற்ற ஓட்டம் தொடர்ந்து ஓட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.