அரபிக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடலில் அடுத்த சில மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரபி கடலின் தென்கிழக்கு பகுதி அதனை ஒட்டியுள்ள மாலத்தீவு பகுதிகளில் வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் அடுத்த சில மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது” எனவும் அடுத்த 4 நாட்களில் கேரளா & மாஹே, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் லட்சத்தீவுகள் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்

 

முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல நாளை (10-ம் தேதி) முதல் 14-ம் தேதிவரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இரண்டு நாட்கள் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளுக்கு 3 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.