தமிழகத்தில் போலி ஜாதி சான்றிதழ் மோசடி நடப்பதாக சுப்ரீம் கோர்ட் அதிருப்தி.

 

தமிழகத்தில், ஜாதி சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துஉள்ளது.

பட்டியல் இனத்தின் ஒரு பிரிவான, ஹிந்து கொண்டா ரெட்டி ஜாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

ஹிந்து கொண்டா ரெட்டி

இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்ததது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டதாவது:

தமிழகத்தை சேர்ந்த பிரதீபா என்பவர் தன் மகனுக்கு ஹிந்து கொண்டா ரெட்டி சமூகத்துக்கான ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார்.

தாசில்தார் முறையான விசாரணை மேற்கொண்ட போது, அந்த பெண் பட்டியலின சமூகத்தை சார்ந்தவர் அல்ல என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவருக்கு ஜாதி சான்றிதழ் மறுக்கப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தை பிரதீபா நாடினார். அரசு தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், அந்த பெண்ணின் மகனுக்கு ஹிந்து கொண்டா ரெட்டி சமூக ஜாதி சான்றிதழ் வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதை கேட்ட நீதிபதிகள், ‘தமிழகத்தில், போலி ஜாதி சான்றிதழ் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. இந்த போலி சான்றிதழ் வழங்கும் விவகாரத்துக்கு பின்னால் மிகப்பெரிய மோசடி நடப்பது தெரிகிறது.

அறிக்கை

‘இதுபோன்ற செயல்பாடுகளை ஏற்க முடியாது. இது மிகவும் ஆபத்தானது. எனவே ஹிந்து கொண்டா ரெட்டி சமூகம் என்ற பட்டியலினத்தின் பெயரில் வழங்கப்பட்டுள்ள ஜாதி சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து, ஜாதி சான்றிதழ் தொடர்பான மாநில அளவிலான ஆய்வுக்குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என, உத்தரவிட்டனர்.