தமிழக சட்டசபையில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று கூறி, கவர்னர் வெளிநடப்பு செய்த விவகாரம், பார்லிமென்டில் நேற்று வெடித்தது. இது தொடர்பாக தி.மு.க., – பா.ஜ., எம்.பி.,க்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
ராஜ்யசபாவில் நேற்று, ஜனாதிபதி உரை மீதான வாதத்தில் தி.மு.க., – எம்.பி., கனிமொழி சோமு பேசியதாவது:
பார்லிமென்டில் ஜனாதிபதி உரை நிகழ்த்த வரும்போது, லோக்சபாவில் செங்கோலை எடுத்துச் சென்று, வாசலில் வரவேற்றுவிட்டு மீண்டும் அதை லோக்சபாவில் வைத்தனர்.
இது ஒரு மரபு. இதேபோல தான் தமிழக சட்டசபையில் கவர்னர் உரையின்போது முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும், முடிவில் தேசிய கீதம் பாடுவதும் மரபாக உள்ளது.
இவ்வாறு கனிமொழி பேசியபோது, பா.ஜ., – எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அரசியலமைப்பு சட்டப் பதவிகளில் உள்ளவர்கள் குறித்து, இங்கு பேசக்கூடாது என வாதிட்டனர்.
சட்டசபை உரிமை
இதையடுத்து ராஜ்யசபா சபை முன்னவரும், சுகாதாரத்துறை அமைச்சருமான நட்டா கூறுகையில், ”தமிழக கவர்னர் குறித்து பேசிய விஷயங்களை சபைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்,” என, கோரிக்கை வைத்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க., உறுப்பினர் சிவா, ”தமிழக சட்டசபையில் என்ன நடந்ததோ, அதைப் பற்றிதான் இங்கு பேசப்பட்டது. புதிதாக எதையும் பேசவில்லை. யாரைப் பற்றியும் பெயர் குறிப்பிட்டுப் பேசவில்லை. சட்டசபையின் உரிமையும், மரபும் முடக்கப்படுவதை கனிமொழி விளக்கினார்,” என்றார்காங்கிரஸ் எம்.பி., ஜெய்ராம் ரமேஷ், ”அரசியலமைப்பு சட்டப் பதவிகளில் உள்ளவர்கள், அந்த அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக நடக்கும்போது, அதற்கு என்னதான் தீர்வு?” எனக் கேள்வி எழுப்பினார்.
எங்கு முறையிடுவது?
தி.மு.க., – எம்.பி., என்.ஆர்.இளங்கோ, ”மத்திய அரசு தயாரித்து தரும் உரையை ஜனாதிபதி இங்கு பேசுகிறார்.
”அதுபோலதான், மாநில அரசு எழுதித் தரும் உரையை சட்டசபையில் கவர்னர் வாசிக்க வேண்டும். ஆனால், அவரோ அதை மறுக்கிறார். இதற்கு, நாங்கள் எங்கு போய் முறையிடுவது,” என்று கேட்டார்.
இதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், சபையில் சில நிமிடங்கள் அமளியும், கூச்சலுமாக இருந்தது.