புதுடில்லி : ‘கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளுக்காக பயங்கரவாதிகளுக்கு நிதி மற்றும் பயிற்சி அளித்தோம். அந்த மோசமான செயலுக்கான தண்டனையை ரொம்பவே அனுபவித்து விட்டோம்’ என பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின், ‘ஸ்கை நியூஸ்’ சேனலுக்கு அளித்த பேட்டியில், பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் க்வாஜா ஆசிப் இதை வாக்குமூலம் போன்று விவரித்தார்.

எனினும், இதற்கு முன் நடந்ததை போலவே, பஹல்காமில் நடந்த தாக்குதலும், சுய லாபத்துக்காக மோடி அரசால் நிகழ்த்தப்பட்டு அல்லது அனுமதிக்கப்பட்டு உள்ளது என்று அவர் அபாண்டமாக குற்றம் சாட்டினார்.

ஊர்ஜிதம்

பஹல்காமில் 26 சுற்றுலா பயணியர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்; இது, 2008 மும்பை தாக்குதலுக்கு பின் நடந்த மோசமான தாக்குதல்.

வழக்கம் போல, நம் அண்டை நாடான பாகிஸ்தான் அரசு தான் இதற்கும் காரணம் என, பரவலாக நம்பப்பட்டது.

மத்திய அரசும் உளவு தகவல்கள் வாயிலாக அதை ஊர்ஜிதம் செய்தது.

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் – இ – தொய்பாவின் கிளையான, ‘தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்’ என்ற அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக, இந்திய உளவுத்துறையின் விசாரணையில் தெரியவந்தது.

அந்த அமைப்பும் இதை பெருமையுடன் ஊர்ஜிதம் செய்தது. அவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆயுதமும், பயிற்சியும் வழங்கியது என்பதும் அம்பலமானது.

ஆனால், ஸ்கை நியூஸ் சேனலுக்கு பேட்டி அளித்த பாக்., ராணுவ அமைச்சர், ‘இதெல்லாம் இந்தியா சொல்லும் தகவல்; நான் இந்த பெயரையே கேள்விப்பட்டது இல்லை’ என்றார்.

அதோடு நிற்கவில்லை. ‘லஷ்கர் – இ – தொய்பா அமைப்பின் கதையே முடிந்த விஷயம். தாய் அமைப்பே இல்லாத போது, அதன் கிளையாக ரெசிஸ்டன்ஸ் பிரன்ட் எப்படி இயங்க முடியும்?’ என்று கேட்டார்.