
பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக மத்திய பாஜக அரசை எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
எம்ஜிஆரின் 107வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை புது வண்ணாரப்பேட்டையில்
அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழக அரசு எதனை நிறைவேற்றச் சொன்னாலும் நிதி இல்லை.. நிதி இல்லை என்கிறது. ஆனால், கார் பந்தயம் நடத்துவதற்கு மட்டும் அரசிடம் நிதி உள்ளது. கார் பந்தயம் அதுவும் சென்னை மாநகருக்குள் நடத்த வேண்டியது அவசியமா?
கருணாநிதிக்கு கடலில் சென்று 83 கோடி ரூபாய்க்கு பேனா நினைவுச் சின்னம் வைக்க வேண்டுமா? அவருக்கு புகழ் வர வேண்டும் என்று சொன்னால் திமுகவின் கட்சிப் பணத்தில் அதனை செலவழிக்கலாமே? அரசின் பணத்தில் செலவு செய்வதை யாராலும் ஏற்க இயலாது” என்று விமர்சித்தார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்பது அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்றும், ஆனால் வேண்டுமென்ற திட்டமிட்டு இரண்டரை ஆண்டுகாலம் தாமதம் செய்து இப்போது திறந்துள்ளார்கள் என்றும், உடனடியாக கிளாம்பாக்கத்திற்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர், ஆட்சி போய்விடும் என்ற பயத்தால் தான் பணிகள் முடிவதற்கு முன், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்துள்ளார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “சேலம் மாவட்டம் எப்போதும் அதிமுகவின் கோட்டையாக இருந்தது. ஸ்டாலின் அறிவுரையின் பேரில் உதயநிதி ஸ்டாலின் அங்கு இளைஞரணி மாநாட்டை நடத்தினார். அதில் நடந்த வேடிக்கையெல்லாம் மக்கள் பார்த்திருப்பார்கள். சீட்டாடும் காட்சிகளையும், மது அருந்தும், குத்தாட்டம் போடும் காட்சிகளை எல்லாம் அதில் பார்த்தோம்” என்றும் விமர்சித்தார்.
அதிமுக ஆட்சி காலத்தில் வர்தா, நிவர் என பல புயல்களை சந்தித்தோம், 6 லட்சம் மரங்கள் புயலால் சாய்ந்தன, அப்போது புயல் வேகத்தில் அதை சரி செய்தோம் என்றும், ஆனால், மிக்ஜாம் புயலின்போது 3 நாட்களுக்கு மக்களுக்கு உணவு கூட கொடுக்க இவர்களால் முடியவில்லை, வானிலை ஆய்வு மையம் எச்சரித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்காததால், தென் மாவட்டங்களில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர், உணவு, மருத்துவம் கிடைக்காமல் துன்பப்பட்டனர் என்றும் சாடினார்.
மேலும், “மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக்கொண்டே உள்ளது. பாஜக மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 55 ரூபாய் இருந்த டீசல் விலை இப்போது கிட்டத்தட்ட 95 ரூபாயாக அதிகரித்துள்ளது.
டீசல் விலை உயர்வதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் பொது மக்களுக்கு அது சிரமமாகவே இருக்கும்.அதுபோலவே பெட்ரோலை ஏழை, எளிய நடுத்தர மக்கள்தான் இரு சக்கர வாகனங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். ஆகவே, மக்களின் கஷ்டங்களை புரிந்துகொண்டு மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் விலையை 15 ரூபாய் வரை குறைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.