புதுடில்லி: சர்வதேச பெண்கள் தினத்தில் வந்தே பாரத் ரயிலை பெண் லோகோ பைலட்டுகள் மட்டும் இயக்கி வருகின்றனர். அவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

சர்வதேச பெண்கள் தினம் இன்று (மார்ச் 08) கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. அதுமட்டுமின்றி பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இந்தியாவில் முதன்முறையாக, இன்று குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் பெண்கள் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, மஹாராஷ்டிராவில் ரயில் எண் 22223, சி.எஸ்.எம்.டி – சாய்நகர் ஷீரடி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், லோகோ பைலட் முதல் டிக்கெட் பரிசோதகர் வரை பெண்கள் கொண்ட குழுவால் இயக்கப்பட்டு வருகிறது. ரயிலை பெண் லோகா பைலட் சுரேகா யாதவ், உதவி லோகோ பைலட் சங்கீதா குமாரி ஆகியோர் இயக்கினர்.

இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அவர்களை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். ‘முக்கியப் பணிகளில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. முழுமையாக பெண்களால் இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ரயில்வே துறையை விட, அதற்கு அப்பாலும் சவாலான பணிகளை மேற்கொள்ள எதிர்கால தலைமுறை பெண்களை ஊக்குவிக்கும்’ என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.