சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதனால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கு, அதிகன மழைக்கான ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில், பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

இது, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, தெற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.

இன்று, வடமேற்கு திசையில் தமிழகம் – இலங்கையை நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையலாம். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும்.

தமிழகத்தில் அனேக இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று 21 செ.மீ., மழை

 மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் இன்று அதிகன மழை, அதாவது, 21 செ.மீ.,க்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 விழுப்புரம், கடலுார், அரியலுார், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் மிக கனமழை அதாவது, 12 முதல் 20 செ.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அப்பகுதிகளுக்கு, ‘ஆரஞ்ச் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

* ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை:

கடலுார், மயிலாடுதுறை மாவட்டங்களில், அதிகன மழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அரியலுார், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, பெரம்பலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை மறுநாள்:

 

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில், மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடப்பட்டுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம்.

நாளை முதல் 29ம் தேதி வரை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து வருவதால், அடுத்த ஐந்து நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.