https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3865548.jpg

புதுடில்லி, பிப். 28- ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் மற்றும் கஸ்டம்ஸ் எனப்படும் சுங்கச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் அதிகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ‘போலீஸ் துறைக்கு உள்ளது போன்ற அதிகாரம் இல்லாவிட்டாலும், வரி ஏய்ப்பு, மோசடிகளில் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து, கைது செய்ய ஜி.எஸ்.டி., மற்றும் சுங்க அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு. இது தொடர்பான சட்டத் திருத்தங்கள் செல்லும்’ என, அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி., சட்டம் மற்றும் சுங்கச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் அதிகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் 279 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அனுமதி


இவை தொடர்பாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பேலா திரிவேதி அடங்கிய அமர்வு விசாரித்தது. கடந்தாண்டு மே 16ல், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தனியாகவும், நீதிபதி பேலா திரிவேதி தனியாகவும் இரண்டு தீர்ப்புகளை எழுதினர். அமர்வு அளித்த ஒருமித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சி.ஆர்.பி.சி., எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் தற்போது அதற்கு மாற்றாக உள்ள பி.என்.எஸ்.எஸ்., எனப்படும் ‘பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா’ ஆகிய சட்டங்களில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு சில உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அவை, சுங்கச் சட்டம் மற்றும் ஜி.எஸ்.டி., சட்டத்துக்கும் பொருந்தும்.

பி.எம்.எல்.ஏ., எனப்படும் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், டில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்பான வழக்கில், ‘அவர் குற்றத்தில் ஈடுபட்டிருப்பார் என்பதை நம்புவதற்கு போதுமான காரணங்கள் இருக்க வேண்டும்’ என, உத்தரவிடப்பட்டது.

பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவு, ஜி.எஸ்.டி., சட்டம் மற்றும் சுங்கச் சட்டத்துக்கும் பொருந்தும். அதாவது குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் செய்திருப்பார் என்று நம்புவதற்கு போதிய காரணம் இருந்தால் மட்டுமே, ஜி.எஸ்.டி., சட்டம் மற்றும் சுங்கச் சட்டத்திலும் கைது செய்ய முடியும்.

இதையும் படிங்க

 
 

தண்டனை பெற்ற தலைவர்கள் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை?

தண்டனை பெற்ற தலைவர்கள் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை?

 

 

இது போன்ற வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றம் புரிந்திருப்பார் என்று, சம்பந்தப்பட்ட துறைகளின் கமிஷனர்கள், தாங்கள் நம்புவதற்கான காரணங்களை பதிவு செய்து, கைது செய்வதற்கு அனுமதி அளிக்கலாம்.

அது போன்ற முடிவை எடுப்பதற்கு காரணமாக இருந்த ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் குறித்து, அதில் அவர்கள் பதிவு செய்ய வேண்டும். குற்றம் நடந்துள்ளது; அந்தக் குற்றம் ஜாமினில் வெளிவர முடியாத ஒன்று என்பதை உறுதி செய்த பிறகே, கைது செய்வதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.

மற்ற சட்டங்களில் உள்ளதுபோல், இந்த இரு சட்டங்களின் கீழும், எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படாவிட்டாலும், தாங்கள் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருந்தால், முன்ஜாமின் கேட்டு விண்ணப்பிக்க முடியும்.

நெருக்கடி


கஸ்டம்ஸ் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளாக மாட்டார்கள். அதனால், போலீசுக்கு உரிய அதிகாரங்களை அவர்கள் எடுத்துக்கொள்ள முடியாது.

ஜி.எஸ்.டி., மற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகள், சோதனைகளின்போது மிரட்டுவது, நெருக்கடி கொடுப்பது போன்றவற்றில் ஈடுபடுவதாக பரவலாக புகார்கள் உள்ளன.

இது போன்ற சந்தர்ப்பங்களில், அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றங்களை நாடலாம். மேலும், இது போன்ற அதிகாரிகள் மீது, துறை ரீதியிலான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும்.

போலீஸ் அதிகாரம் இல்லாதபோதும், மோசடி மற்றும் வரி ஏய்ப்பு போன்றவற்றில் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து, கைது செய்ய, ஜி.எஸ்.டி., மற்றும் சுங்க அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு. இருப்பினும், கைது செய்வதற்கு முகாந்திரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இது தொடர்பாக, ஜி.எஸ்.டி., சட்டம் மற்றும் சுங்கச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள், அரசியலமைப்பு சட்டத்தின்படி செல்லும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.