Latest Tamil News

புதுடில்லி: ‘ஹிந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வங்கதேச அரசிற்கு இந்தியா வலியுறுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போராட்டம் நடத்திய ஹிந்துக்கள் மீது அந்நாட்டு ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: சிட்டகாங்கில் ஹிந்து சமூகத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.

பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹிந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பாதுகாப்பு

ஹிந்துக்களுக்கு எதிராக, சமூக ஊடகங்களில் பல வீடியோக்கள் பரவுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம். இது கண்டிக்கத்தக்கது. ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, பல சொத்துக்கள் சூறையாடப்பட்டன.

இது போன்ற விஷயங்கள் வகுப்புவாத பதற்றத்தை அதிகரிக்க வழிவகுக்கும். வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மியான்மரில் ஜனநாயகம், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உறுதியான ஆதரவாளராக இந்தியா உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை

இந்தியா-அமெரிக்க பொருளாதார உறவுகள் குறித்து, நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில் ‘பொருளாதார உறவுகளில் என்னென்ன பிரச்னைகள் இருந்தாலும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யும். இந்தியா, அமெரிக்கா இடையே உறவுகள் வலுவடைகின்றன’ என்றார்.