10 நாட்கள் வரை தான்… செந்தில் பாலாஜி சிகிச்சை குறித்து நீதிபதி கூறியது என்ன?
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத் துறையினர் கடந்த மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சட்டவிரோத காவலில் வைத்துள்ளதாகக் கூறி, அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கின் வாதங்கள் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி, நிஷா பானு அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, செந்தில் பாலாஜியை விடுவிக்கலாம் என நிஷா பானு தீர்ப்பு வழங்கினார். ஆனால் நீதிபதி பரத சக்கரவர்த்தி, “தள்ளுபடி செய்யக்கூடிய மனு இது. செந்தில் பாலாஜி ஒரு நிமிடம் கூட கஸ்டடியில் இல்லை. சிகிச்சை நாட்களை நீதிமன்றம் காவல் நாட்களாக கருத முடியாது” என்று தீர்ப்பளித்தார்.\
மேலும், “செந்தில் பாலாஜி குணமடைந்த பின் அமலாக்கத் துறை கஸ்டடியில் விசாரிக்கலாம். சிகிச்சை பெற்று வருகிறார் என்பதற்காகவே அவரை விடுவிக்க முடியாது. தற்போதைய நிலையில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சையை தொடரலாம். இன்றில் இருந்து 10 நாட்கள் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். 10 நாட்களுக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டால் சிறைத் துறை மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம்” எனவும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இரு வேறு தீர்ப்புகள் காரணமாக இவ்வழக்கு மூன்றாவது நீதிபதி அமர்வுக்கு செல்கிறது. மூன்றாவது நீதிபதி யார் என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்வார்.