அப்படியே மாறிய அதிமுக! மோடி தலைமையில் தான் லோக்சபா தேர்தல்! தீர்மானத்தை வழிமொழிந்த எடப்பாடி.
டெல்லி: டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மிக முக்கிய தீர்மானத்தை எடப்பாடி பழனிச்சாமி வழிமொழிந்தார். அந்த தீர்மானம் தான் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிரமாக வியூகம் வகுத்து உள்ளன. பெங்களூரில் நேற்று நடந்த INDIA என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் கூட்டணியை அமைத்துள்ளன.
I-N-D-I-A என்பதற்கு Indian National Developmental Inclusive Alliance என்பது தான் விரிவாக்கமாகும். தமிழில் கூற வேண்டும் என்றால் இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி என சொல்லலாம். இதற்கு போட்டியாக நேற்று டெல்லியில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்பட பிற கட்சி தலைவர்கள் என மொத்தம் 38 கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர்.தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தம்பித்துரை எம்பி, தமாகா தலைவர் ஜிகே வாசன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட மேலும் சிலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பிரதமர் மோடியின் ஒருபுறம் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அமர்ந்திருந்த நிலையில் மறுபுறத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கை வழங்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதில் முக்கிய தீர்மானத்தை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்மொழிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், அசாம் கன பரிஷத் கட்சியின் அதுல் போராஜியும் வழிமொழிந்தனர். இந்த தீர்மானத்தின் சாராம்சம் என்னவென்றால் 2024 நாடாளுமன்ற தேர்தலை பிரதமர் மோடி தலைமையில் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும் என்பதாகும்.
இந்த தீர்மானத்தில் ‛‛உலகின் மிக பிரபலமான தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார். இந்தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்றிருக்கிறார். எதிர்க்கட்சிகள் குழப்பத்தில் உள்ளன. 2014ம் ஆண்டை விட 2019 ல் ஆண்டில் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்ததை போல் அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம்.
எதிர்க்கட்சிகளின் பொய்கள், வதந்திகள் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்படும். இந்த குற்றச்சாட்டுகளை மக்கள் குப்பையில் போடுகின்றனர். ஏனென்றால் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை மீ து நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். 2019ம் ஆண்டில் பெற்ற வெற்றியை விட 2024 தேர்தலில் இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பதில் பிரதமர் மோடியின் தலைமைப்பண்பு மீது அனைத்து கட்சிகளும் நம்பிக்கை வைத்துள்ளன.
இதனால் பிரதமர் மோடி 3வது முறையாக நாட்டின் பிரதமராக வருவார். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் கடந்த 9 ஆண்டில் வழங்கிய நல்லாட்சி தான். பல்வேறு அபிவிருத்தி பணிகளம், அனைத்து மாநில மக்கள் சமூகங்களும் இந்த வளர்ச்சி பணியை கண்டுள்ளன. ஏழைகள், பெண்கள், பட்டியலிடப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் உள்ளிட்டவர்களுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் சரி, தற்போதைய பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணியும் சரி அனைத்து மாநிலங்களின் விருப்பங்களை நிறைவேற்றி நாட்டை கட்டியெழுப்பி வருகின்றன. பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா பொருளாதாரத்தில் வலிமையான நாடாக மாறி பாதுகாப்பு மிக்க நாடாக மாறி வருகிறது. பிரதமர் மோடியின் செயல்பாட்டை பாராட்டி 14 நாடுகள் உயரிய விருதுகள் வழங்கி உள்ளன. இதனால் நாம் அனைவரும் ஒன்றாகி ஒன்றுபட்டுள்ளோம்” என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிமுக, பாஜக தலைவர்கள் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக தேர்தல் தொடர்பான கூட்டணி குறித்து இருகட்சி தலைவர்கள் வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் மிகப்பெரிய கட்சி அதிமுக தான். தமிழகத்தில் கூட்டணியை அதிமுக தான் முடிவு செய்யும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இந்நிலையில் தான் நேற்றைய கூட்டத்தில் பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம் எனும் தீர்மானத்தை எடப்பாடி பழனிச்சாமி வழிமொழிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.