குரூப்-4 பணி: 21-ஆம் தேதி முதல் 2ம் கட்ட கலந்தாய்வு – டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
குரூப்-4 பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 21-ஆம் தேதி தொடங்கும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, “ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -IV (குரூப்- 4)இல் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர் / இளநிலை உதவியாளர்/ கள உதவியாளர் / வரித் தண்டகர் / பண்டகக் காப்பாளர் போன்ற பதவிகளுக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வானது, கடந்த 20.07.2023 முதல் 10.082023 வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற்றது.
மேற்கூறிய கலந்தாய்வில் 5354 இளநிலை உதவியாளர்/ வரித் தண்டலர் / கன உதவியாளர் பணியிடங்களும் மற்றும் 425 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. மேலும், மீதமுள்ள 47 காலிப்பணியிடங்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் தகுதி வாய்ந்த தேர்வர்களைக் கொண்டு நிரப்பப்படும்.
மேலும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் – தேர்வு IV (குரூப் – IV)இல் அடங்கிய 3373 தட்டச்சர் பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 21.08.2023 முதல் 11.09.2023 வரை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து 1079 சுருக்கெழுத்துத் தட்டச்சர் பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 20.09.2023 முதல் 26.092023 வரை நடைபெறும்.