டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி, தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்ததுடன் இந்தியா கூட்டணியின் முன்னேற்றம் குறித்தும் விவாதித்தார்.

கிரிக்கெட், ஹாக்கி தவிர மற்ற விளையாட்டுப் போட்டிகளில் திறமையானவர்களைக் கண்டறிந்து பயிற்சியளித்து, ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் பதக்கங்களை வெல்லச் செய்யும் நோக்கில், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் 2018-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெறுகின்றன. சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சியில் ஜனவரி 19 முதல் 31-ஆம் தேதி வரை போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டியின் தொடக்க விழாவை சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி சென்ற அமைச்சர் உதயநிதி, தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு முறைப்படி அழைப்பு விடுத்தார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி, தமிழ்நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமருடன் கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.

பிரதமருடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்வதாக உறுதியளித்ததாக கூறினார். தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதை வலியுறுத்தியதாகவும் கூறினார்.

பிரதமருடனான சந்திப்பை தொடர்ந்து மாலையில், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இல்லத்தில் அவரை சந்தித்து பேசினார். சோனியா காந்தியின் உடல்நலம் குறித்து விசாரித்ததாகவும், இந்தியா கூட்டணியின் முன்னேற்றம் குறித்து சுருக்கமாக விவாதித்ததாகவும் எக்ஸ் பக்கத்தில் உதயநிதி பதிவிட்டுள்ளார்.

மரியாதை நிமித்தமான சந்திப்பில் அவரிடம் பேசியதை இப்போது சொல்ல முடியாது என செய்தியாளர்களிடம் கூறினார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்க இருக்கும் வேளையில், ராகுல் காந்தி உதயநிதி ஸ்டாலினின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.