சார், எங்க டீக்கடைக்கு 6 மாசமாக கடன் பாக்கி.. போலீஸ் ஸ்டேசன் மீது சிஎம் செல்லுக்கு போன புகார்
கள்ளக்குறிச்சி: சார், எங்க டீக்கடைக்கு 6 மாசமாக டீக்குடித்த பணத்தை கொடுக்காமல் கடன் பாக்கி வைச்சிருக்காங்க.. போலீஸ் ஸ்டேசனில் இருந்து 5000 ரூபாய் பணம தரனும்.. தயவு செய்து வாங்கி கொடுங்க என்று முதல் அமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை கண்டு கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
கரியாலூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள், போலீஸ் ஸ்டேசன் பக்கத்திலேயே உள்ள ஒரு டீக்கடையில் டீ குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். ஆனால் அதற்கு உரிய முறையில் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களாக கடனை திருப்பி செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. அதாவது 6 மாத கடன் பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை உள்ள கரியாலூர் உள்ள ஊரில் காவல் நிலையம்செயல்படுகிறது. இந்த காவல் நிலையம் கல்வராயன் மலைபகுதியில் நடக்கும் குற்றசம்பவங்களை விசாரிக்கும் முக்கியமான காவல் நிலையமாகும். இந்த கரியாலூர் காவல் நிலையத்தில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் என்று மொத்தம் 10 போலீசார் பணிபுரிந்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக உடனடியாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதல் அமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு டீக்கடை உரிமையாளர் தரப்பில் இருந்து புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டதா? அல்லது காவல் நிலையத்தில் உள்ள யாராவது அனுப்பி வைத்தார்களா என்பது தெரியவில்லை. விசாரணைக்கு பின்னரே என்ன நடந்தது என்பது தெரியவரும் என்கிறார்கள் அதிகாரிகள்.
இந்தநிலையில், போலீசார் வைத்த டீக்கடை கடன் விவகாரம் சிஎம் வரை கொண்டு போகப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு புகாராக கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்ற இந்த புகார் நேற்று கரியாலூர் காவல் நிலையத்திற்கும் கடைசியாக வந்துள்ளது.
அதில் கடந்த 6 மாதங்களாக காவலர்கடள் குடித்த டீக்கு ரூ.5 ஆயிரம் வரைக்கும் கடன் உள்ளது. இதை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது கரியாலூர் காவலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.