சென்னை மாநகராட்சிக்கு சிறப்பு அந்தஸ்து திரும்ப கிடைக்குமா? முக்கிய அதிகார வரம்புகளை மீட்க அரசிடம் பரிந்துரை.

சென்னை: ‘சென்னை மாநகராட்சியின், தன்னாட்சி அதிகாரம் பறிக்கப்பட்ட நிலையில், அதை மீட்டெடுக்கும் வகையில், முதற்கட்டமாக ஒப்பந்தம், பணிகள், சட்டம் தொடர்பான மூன்று குழுக்களின் பரிந்துரைகளை திருப்ம்ப்பெற, அரசிடம் கேட்டுள்ளோம். இதன் வாயிலாக சில அதிகார வரம்புகள் பாதிக்காமல் இருக்கும்,” என, கமிஷனர் ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி மாதாந்திர கவுன்சில் கூட்டம், மேயர் பிரியா தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.

அதில், நேரமில்லா நேரத்தின்போது நடந்த விவாதம்:
திலகர், 92வது வார்டு, சுயேச்சை கவுன்சிலர்: சென்னை மாநகராட்சியில் உள்ள மயான பூமிகளில், 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெறுகின்றனர். எனவே, குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்து, மாநகராட்சியே வாங்கி கொள்ளலாம். தொகுதி வாரியாக வார்டு பிரிப்பு எப்போது நடக்கும் என்பதை அறிவிக்க வேண்டும்.

மேயர் பிரியா: சென்னை மாநகராட்சியில், மயான பூமிகளில் அனைத்து சேவைகளும் இலவசமாக தான் வழங்கப்படுகிறது. அதுகுறித்து அறிவிப்பு பலகை விரைவில் அமைக்கப்படும். தொகுதி வாரியாக வார்டு பிரிப்பு அறிவிப்பை, அமைச்சர் விரைவில் வெளியிடுவார்.

ரவிசங்கர், 129வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: ட்ரோன் வாயிலாக சொத்து வரி மதிப்பீடு செய்வோர் ஏழை, நடுத்தர வீடுகளில் தான் மேற்கொள்கின்றனர். அடுத்து லோக்சபா தேர்தல் வருகிறது. ஏற்கனவே சொத்து வரி உயர்த்தி உள்ளோம்.

மகேஷ்குமார், துணை மேயர்: சென்னையில் முதற்கட்டமாக பெருநிறுவன கட்டடங்களில் ஆய்வு மேற்கொள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
தனசேகரன், கணக்கு நிலைக்குழு தலைவர்: திரையரங்கம், திருமண மண்படங்கள், தனியார் தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கான பல கோடி ரூபாய் சொத்துவரி நிலுவையில் உள்ளது. அவற்றை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரியா சபை கூட்டத்தில், மாநகராட்சி மற்றும் அதிகாரிகள் பங்கேற்க வேண்டும்.

கமிஷனர் ராதாகிருஷ்ணன்: விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியின் தன்னாட்சி அதிகாரம் பறிப்பு குறித்து கவுன்சிலர்கள் சிலர் கேள்வி எழுப்பினர்.

அதற்கு கமிஷனர் ராதாகிருஷ்ணன் அளித்த பதில்:
அனைத்து மாநகராட்சிகளுக்கும், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான 2023 விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதியால், சில அதிகார வரம்புகள் குறைக்கப்பட்டுள்ளன. மேயர், நிலைக்குழுக்கள் உள்ளிட்ட அதிகார வரம்புகள் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், பணியாளர்களும் சிலர், தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் ஒப்பந்தம், பணிகள், சட்டம் தொடர்பான மூன்று குழுக்களின் பரிந்துரைகளை அரசுக்கு சமர்ப்பித்துள்ளோம். அதில், சில அதிகார வரம்புகள் பாதிக்காமல் இருக்க அனுமதிக்கும்படி கோரியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.