திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கபின், ஏஞ்சலின் ருபீஸியா தம்பதி.

 

இவர்களின் நான்கு மாதக் குழந்தை சுஜனுக்கு, முத்தாண்டிபாளையத்திலுள்ள அங்கன்வாடி மையத்தில் புதன்கிழமை தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை வீட்டிலிருந்த குழந்தை சுஜன் அசைவற்றுக் கிடந்திருக்கிறது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், குழந்தையை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துக்கொண்டு சென்றனர்.

 ஊசி

குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை சுஜன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து பல்லடம் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த பல்லடம் போலீஸார், குழந்தை சுஜனின் உடலைப் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள், “குழந்தை சுஜனுக்கு முத்தாண்டிபாளையம் அங்கன்வாடி மையத்தில்வைத்து இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட குழந்தைகளுக்குக் காய்ச்சல் வருவது வழக்கமானதுதான். அதே போன்று குழந்தை சுஜனுக்கும் காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது.

 குழந்தை இறப்பு

காலையில் தாய் ஏஞ்சலின் ருபீஸியா சுஜனுக்குப் பால் கொடுத்திருக்கிறார். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து குழந்தை உயிரிழந்திருக்கிறது. தடுப்பூசி செலுத்தியதால் குழந்தை உயிரிழந்ததா அல்லது வேறு காரணமா என்பது பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவில்தான் தெரியவரும்” என்றனர். தடுப்பூசி செலுத்திக்கொண்ட அடுத்த நாள் நான்கு மாதக் குழந்தை உயிரிழந்தது, பல்லடத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.