தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத் தொகை வழங்குகிறார். இதற்கான நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் சுமார் 1,500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொள்கின்றனர்.

அதேசமயம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கும் நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்குகிறார். விழாவை ஒட்டி, மாணவர்கள் அனைவரும் பெற்றோர்களுடன் நேற்று சென்னை அருகே வந்து தங்க வைக்கப்பட்ட நிலையில், இன்று காலை உணவை முடித்துக் கொண்டு வண்டலூர், கேளம்பாக்கம் வழியாக வந்து நீலாங்கரையை சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காலை 7:30 மணி முதலே மாணவர்களும் பெற்றோர்களும் மண்டபத்துக்கு வருகைத் தரத் தொடங்கினர். விஜய் சந்தித்து பரிசுத் தொகை பெறவுள்ளோம் என்ற உற்சாகத்தில் மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். மாதவரம் தொகுதியிலிருந்து வந்த ஹர்பியா 590 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும் விஜய்யை சந்திக்கவுள்ளது உற்சாகத்தை சந்தித்துள்ளது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய உமா சங்கரி என்ற மாணவி, ‘கள்ளக் குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியிலிருந்து வந்துள்ளேன். 550 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். தளபதியைப் பார்க்க வெயிட்டிங். அப்பா, அம்மா எல்லோரும் ஹேப்பியா.. அம்மா, அப்பா, நான் மூன்று பேரும் வந்துள்ளோம். கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியிலிருந்து வந்துள்ளது. இந்த ஆண்டிலிருந்து விஜய் இப்படி கொடுக்கிறார்.. அதற்கு நாங்கள் கொடுத்துவைத்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.