தென்மாநிலங்களில் ஊழல் அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது… பிரதமர் மோடி.

எதிர்க்கட்சிகள் ஆளும் தென்மாநிலங்களில் ஊழல் அதிகரித்துள்ளது கவலை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கில், அதற்கான ஆயத்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக உத்தர பிரதேசத்தின் கிழக்குக் பகுதியில் உள்ள பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள 45 எம்பி-க்கள் மற்றும் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள கூட்டணிக் கட்சி எம்பி-க்களுடன் பிரதமர் மோடி நேற்று டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டார்.

முதல் கட்டமாக உத்தர பிரதேச எம்பி-க்களின் கூட்டத்தில் பிரதமருடன், அமித் ஷா மற்றும் ராஜ்த்நாத் சிங் பங்கேற்றனர்.

அப்போது, பேசிய பிரதமர் உத்தர பிரதேசத்தில் வறுமை ஒழிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அனைவரும் சமூக வலைதளங்களில் முழுவீச்சில் இயங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்காக, சமூக வலைதளங்களில் சிறப்பாக செயல்படும் நிபுணர்கள் மூலம் மத்திய அரசின் திட்டங்கள் பற்றி மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்

குறிப்பாக, ராமர் கோயில் கட்டும் வாக்குறுதியை நிறைவேற்றியதால் பாஜகவுக்கு பொதுமக்கள் வாக்களித்து விடுவார்கள் என்று எண்ணிவிடாமல், களத்தில் இறங்கி அனைவரும் கட்சியை பலப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, தென்மாநில கூட்டணிக் கட்சி எம்பி-க்களின் கூட்டத்தில் ஜெபி.நட்டா, நிதின் கட்கரி மற்றும் அதிமுக எம்.பி., தம்பித்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பேசிய பிரதமர், தென் மாநிலங்களில் குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஊழல் தலைவிரித்தாடுவதாக கவலை தெரிவித்ததாகவும், மேலும், இலவசங்கள் வழங்கும் கலாசாரம் அதிகரித்துள்ளதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து இலவசங்கள் அதிகரித்தால் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் எனவும் குறிப்பட்டுள்ளார். எனவே, கடந்த 9 ஆண்டுகளாக பாஜக ஆட்சியின் சாதனைகள், திட்டங்களை அனைத்து தரப்பு மக்களிடமும் எடுத்துச் சென்று தமது கரத்தை பலப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.