பெட்ரோல் விலை ரூ.15 ஆக குறையும்… எப்படி தெரியுமா…? நிதின் கட்கரி சொன்ன குட் நியூஸ்..

நாட்டில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.15ஆக குறைக்க சாத்தியம் உள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பிரதப்கர் பகுதியில் நேற்று பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சென்றிருந்தார். இந்நிகழ்வில் அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டும் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றார். நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பெட்ரோல் உள்ளிட்ட எரிவாயுக்களில் எத்தனால் கலப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார்.

நிகழ்வில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது,  “நமது அரசு விவசாயிகளை உணவு வழங்குபவர்களாக மட்டும் அல்லது எரிபொருள் போன்ற ஆற்றலை வழங்குபவர்களாகவும் உருவாக்கும் நோக்கம் கொண்டுள்ளது. அதனால் தான் கரும்பில் இருந்து எடுக்கும் எத்தனால் மூலம் எரிபொருளை உற்பத்தி செய்து வாகனங்களை இயக்கும் திட்டத்தை தீவிரமாக முன்னெடுத்துள்ளது.

விரைவில் நாட்டில் அனைத்து வாகனங்களும் விவசாயிகளால் உருவாக்கப்பட்ட எத்தனால் மூலம் இயங்கும். சராசரியாக 60 சதவீதம் எத்தனால் மற்றும் 40 சதவீதம் மின்சாரத்தை எடுத்து எரிபொருள் தயாரித்தால் ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.15க்கு விற்பனை செய்ய முடியும். இதன் மூலம் மக்களுக்கு நன்மை ஏற்படும்.

காற்றுமாசு பிரச்சனை குறையும், தற்போது நாம் வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணை இறக்குமதிக்காக ரூ.16 லட்சம் கோடி செலவு செய்கிறோம். இந்த பணத்தை மிச்சம் செய்தால், விவசாயிகளின் குடும்பத்திற்கு அது நேரடியாக நலத்திட்ட உதவிகளாக செல்லும்.

இன்றைய விவசாயிகள் உணவு வழங்குவபர்கள் மட்டும் அல்ல, எத்தனால் மற்றும் சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆற்றல் வழங்குவர்களாக மாறியுள்ளனர். ஆட்டோவில் இருந்து கார்கள் வரை அனைத்து வாகனங்களும் எத்தனால் மூலம் ஓடும் என்று கூறியுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் சென்னையில் பெட்ரோல் ரூ.102.63க்கும் டீசல் ரூ.94.24க்கும் விற்பனையாகிறது.