சென்னை: பொங்கல் பண்டிகையின் போது, ‘சிஏ’ தேர்வுகள் அறிவிக்கப்பட்டதற்கு, தமிழக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ‘எப்போது பார்த்தாலும் தமிழ் விரோதி பிரசாரம் சிலருக்கு பழக்கமாகி விட்டது’ என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்டமாக தெரிவித்தது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘சிஏ’ தேர்வு அட்டவணை தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி., வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை:

 பொங்கல் பண்டிகை தினமான ஜனவரி 14 மற்றும் 16ம் தேதிகளில், ‘சிஏ’ தேர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பொங்கல் திருவிழா என்பது, தமிழகத்தின் தனித்துவமிக்க பண்பாட்டு திருவிழா. இதை கருத்தில் வைத்து, தேர்வர்களுக்கு சிரமமின்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், ஐ.சி.ஏ.ஐ., தலைவர் ரஞ்சித்குமார் அகர்வாலுக்கும் கடிதம் எழுதி உள்ளேன்.

 

பொங்கல் அன்று தேர்வுகள்; எத்தனை முறை சொன்னாலும் திருந்தப் போவதில்லை. அதற்காக நாம் ஓயப்போவதும் இல்லை. மத்திய அரசே தேர்வு தேதியை உடனே மாற்று. தமிழ் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல, தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் உட்பட பலரும் வலியுறுத்தி உள்ளனர். தி.மு.க., மாணவர் அணி தலைவர் ராஜிவ்காந்தி, ‘பொங்கல் அன்று சி.ஏ., பவுண்டேஷன் தேர்வுகளை மத்திய அரசு நடத்துகிறது; தீபாவளி அன்று தேர்வு நடத்துவீர்களா’ என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

 இதற்கு, பா.ஜ., மாநில செயலர் எஸ்.ஜி.சூர்யா பதில் அளித்துள்ளார். அதில், ‘இதே பொங்கல் தான் மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி; வட மாநிலங்களில் லோஹ்ரி; உ.பி.,யில் கிச்சடி; குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உத்தராயணி; ஹரியானா, பஞ்சாபில் மாஹி என்று கொண்டாடப்படுகிறது. எனவே, பொங்கல் தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுதும் கொண்டாடப்படும் தேசிய பண்டிகையாகும். உங்கள் கோட்பாட்டின்படி, பா.ஜ., அனைத்து மாநிலங்களுக்கும் எதிரானதா.

 

மேலும், சி.ஏ., தேர்வு தேதியை மத்திய அரசு முடிவு செய்வதில்லை; ஐ.சி.ஏ.ஐ., என்ற தன்னாட்சி பெற்ற அமைப்பு நடத்துகிறது. அவ்வமைப்பு தான் தேர்வுக்கான தேதியை தீர்மானித்து அறிவிக்கிறது. மற்றபடி, நிதி அமைச்சகத்துக்கும், இந்த நடைமுறைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. தொழில் முறை பாடத்தேர்வுகளுக்கு ஏன் இத்தகைய விடுமுறை நாட்கள் தேர்வு செய்யப்படுகின்றன என்பது, தொழில் வல்லுனர்களுக்கு மட்டுமே தெரியும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அவரது பதிவை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, ‘சரியாகவும், விளக்கமாகவும் பதில் சொல்லி இருக்கீங்க சூர்யா. எதில பார்த்தாலும், எப்ப பார்த்தாலும், தமிழ் விரோதி பிரசாரம் சிலருக்கு பழக்கமாகி விட்டது’ என்று கூறியுள்ளார். இது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.