Chandrayaan 3 live update : கடந்த மாதம் 14 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட சந்திரயான் – 3 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக ஆகஸ்ட் 17 ஆம் தேதி விக்ரம் லேண்டர் பிரிக்கப்பட்டது. நிலவின் மிக அருகில் சுற்றுவரும் லேண்டரை தென் துருவப் பகுதியில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

பெங்களூர் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் உச்சகட்ட பாதுகாப்பு

இன்று சந்திரயான் 3 நிலவில் தரை இறங்குவதை ஒட்டி
கர்நாடக மாநிலம் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். எனவே சந்திரயான் மூன்று நிலவில் தரையிறங்கும் காட்சிகளை பார்க்க பொது மக்களுக்கு அனுமதி இல்லை.

பெங்களூர் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களுக்கு இன்று டிஜிட்டல் திரை மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இன்று மாலை 5 மணியிலிருந்து இஸ்ரோ நேரடி காட்சிகள் இணையதளம் மூலமாக நிலவில் தரையிறங்கும் விக்ரம் லாண்டரே பார்க்கும் வகையில் மக்களுக்கு ஒளிபரப்பு செய்ய உள்ளனர்.

நிலவின் தென்துருவம் ஏன் ஸ்பெஷல்?

கோடிக்கணக்கான ஆண்டுகளாக வெளிச்சமே படாதப்பகுதி என்பதே. நிலவின் தென்துருவம், நிரந்தரமாக சூரியனுக்கு மறைவாகவே இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கூற்று. மேலும் இங்கு நிலவும் தட்பவெட்ப நிலை மைனஸ் 203 டிகிரி செல்சியசாக இருப்பதும் விஞ்ஞானிகளை ஆராய்ச்சி மேற்கொள்ள தூண்டும் முக்கியமான காரணியாகும். நிலவின் தென்பகுதியில் மிகப்பெரிய பள்ளங்கள், இருப்பதும் இவை பல கிலோ மீட்டர் தொலைவு வரை பரவிகிடப்பதும் விஞ்ஞானிகளை ஈர்த்த ஒன்று.

இந்த பள்ளங்கள் மிகப்பெரிய குளிர் பொறிகளாகும், அவை ஆரம்பகால சூரிய குடும்பத்தில் இருந்து ஹைட்ரஜன், நீர் பனி மற்றும் பிற ஆவியாகும் பொருட்களின் புதைபடிவ பதிவைக் கொண்டிருக்கின்றன. இவை பல கோடி ஆண்டுகளாக மாற்றங்களை கண்டிராதவை என்றும், இதன் மூலம் சூரிய குடும்பம் உருவானது தொடர்பான கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.

விக்ரம் லேண்டரில் உள்ள சிறப்பம்சங்கள் என்ன?

கடந்த கால தவறுகளை கருத்தில் கொண்டு சந்திரயான் 3 விண்கலத்தை வடிவமைத்துள்ளது இஸ்ரோ. குறிப்பாக விக்ரம் லேண்டரில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதிக வேகத்தில் தரையிரங்க ஏதுவாக கடந்த முறையை விட விக்ரம் லேண்டரின் கால்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, நொடிக்கு 3 மீட்டர் அளவிற்கு பயணித்தாலும் கால்கள் உடையாத வகையில் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

விக்ரம் லேண்டரில் மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றொரு மாற்றம் என்பது, அதிக எரிபொருள் ஆகும். அதிக இடையூறுகள் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ளும் விதமாகவும், திரும்பி வர ஏதுவாகவும் அதிக எரிபொருள் நிரப்பட்டடுள்ளது. மேலும் doppler velocity metre என்ற புதிய லேசர் கருவியும் விக்ரம் லேண்டரில் பொருத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் எஞ்ஜினுக்கு ஏற்படும் இடையூறு, உந்துதலில் ஏற்படும் இடையூறு சென்சாரில் ஏற்படும் தோல்வி ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

விக்ரம் லேண்டருக்கு கூடுதல் சூரிய தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், சூரியனுக்கு எதிரான திசையில் லேண்டர் தரையிரங்கினாலும் தானாக மின்சக்தியை உற்பத்தி செய்துகொள்ளும். மேம்படுத்தப்பட்ட லேண்டரை கடந்த இரு ஆண்டுகளாக இஸ்ரோ சோதித்து வந்தது. இது சந்திரயான் – 2 விண்கலத்திற்கு செய்யப்பட்ட சோதனைகளை விட மிக அதிகம் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.