ஆசிய விளையாட்டுப் போட்டியில் 3 வெள்ளி உட்பட மொத்தம் 5 பதக்கங்களை இந்தியா இதுவரை வென்றுள்ளது.

19ஆவது ஆசிய விளையாட்டுப்போட்டிகள் கடந்தாண்டு நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கின. இதில் இந்தியா சார்பில் 655 வீரர்கள் 39 வகையான போட்டிகளில் களம் காண்கின்றனர்.

தற்போது தொடக்க நிலை போட்டிகள் முடிந்து பதக்கங்களுக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆடவர் lightweight double sculls என்ற துடுப்புப் படகுப்போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் லால்ஜாட், அர்விந்த் சிங் ஜோடி பந்தய இலக்கை 6நிமிடம், 28 புள்ளி 18 விநாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றனர். இதேபோல் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் நடந்த போட்டியில் இந்தியாவின் மெஹுலி கோஷ், ரமிதா ஆஷி சௌக்சே ஜோடி, ஆயிரத்து 886 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளனர்.

பின்னர் நடந்த 8 பேர் கொண்ட குழு துடுப்புப்படகு போட்டியில் இந்திய ஆடவர் அணி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியது. பந்தய தூரத்தை இந்திய குழு, 5 நிமிடங்கள் மற்றும் 43 புள்ளி 1 விநாடிகளில் கடந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆடவர் துடுப்புப் படகுப் போட்டியில் பாபு யாதவ், ராம் இணை பந்தய இலக்கை 6 நிமிடங்கள் 50 விநாடிகளில் கடந்து வெண்கலப்பதக்கத்தை வென்றது.