அண்ணாமலை விவகாரத்தில் நிதானம் காட்டும் எடப்பாடி- டெல்லியில் முகாமிட்ட சீனியர்கள்… பின்னணி என்ன?!

.தி.மு.க மீதும் அந்தக் கட்சியின்மீதும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சனங்களை அள்ளித்தெளித்து வருகிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து விமர்சனத்தைத் தொடங்கிய அண்ணாமலை, `அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல்களை வெளியிடுவேன்’ என்று பேசிருந்தார். இந்த நிலையில்தான், சமீபத்தில் பேரறிஞர் அண்ணா குறித்து சர்ச்சை கருத்தை பேசிய அண்ணாமலை மீது, ஒட்டுமொத்த அ.தி.மு.க தலைவர்களும் பாய்ந்துவிட்டார்கள்.

 எடப்பாடி பழனிசாமி

இதற்கு பதிலளிக்கும்விதமாகப் பேசிய அண்ணாமலை, எடப்பாடியை மறைமுகமாகவும், முன்னாள் அமைச்சர்களை நேரடியாகவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து, பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லையென்று அ.தி.மு.க தரப்பிலிருந்து செப்.,18-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

ஆனால், அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி இது குறித்து வெளிப்படையாகவோ, அறிக்கை வாயிலாகவோ எந்த கருத்தும் தெரிவிக்காமல் நிதானமாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், அ.தி.மு.க துணை பொதுச்செயலாளர்கள் நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக சீனியர் அமைப்புச் செயலாளர் ஒருவரிடம் பேசினோம்.

“அண்ணாமலை விவகாரத்தை எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எடப்பாடி கையாளவில்லை. மிகவும் நிதானமாகத்தான் அடியெடுத்து வைக்கிறார். அண்ணாமலையின் நடவடிக்கை குறித்து டெல்லி தலைமையிடம் பல முறை புகாராகச் சொல்லியும் எந்த நடவடிக்கையும் இல்லை.

அண்ணாமலையில் இந்த சர்ச்சை நடவடிக்கையெல்லாம் டெல்லியின் அறிவுறுத்தல் இல்லாமல் நடைபெற வாய்ப்பே இல்லையென்று எடப்பாடி திடமாக நம்புகிறார். அதனால், டெல்லி தலைமை நெருக்கமாக இருந்தும், கூட்டணி இல்லை என்று அறிவித்தார். இதை டெல்லி பா.ஜ.க நிச்சயம் எதிர்பார்த்திருக்காது.