“சூறையாடப்பட்ட கிராமம்.. நிர்வாணமாக்கப்பட்ட பெண்கள்.. தடுக்க சென்ற ஆண்கள் கொலை” – அதிர்ச்சியூட்டும் FIR தகவல்கள்.

 

 

 

 

மணிப்பூரில் கிராமம் மொத்தத்தையும் சூறையாடிய வன்முறை கும்பல், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களையும் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்றதும் தடுக்க வந்த 2 ஆண்களை கொடூரமாக கொன்றதும் என பல அதிர்ச்சி தகவல்கள் எப்ஐஆர் மூலம் வெளியாகி உள்ளன.

மணிப்பூரில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கி உள்ளது.இந்த சம்பவம், கடந்த மே மாதம் காங்போக்பி மாவட்டத்தில் 4 ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது.

கலவரத்தால் உயிருக்கு பயந்து பலரும் வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மே 18 ஆம் தேதியே, பக்கத்து மாவட்டத்தில் உள்ள காவல்நிலையில் புகார் அளித்துள்ளார். 62 நாட்களுக்கு பிறகு ஜூன் 21 ஆம் தேதி வழக்கு பதிவு செய்த போலீசார், வீடியோ பரவி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய பிறகு 4 பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், சைகுல் காவல்நிலையத்தில் பதியப்பட்டுள்ள எப்ஐஆர் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மே 4 ஆம் தேதி சைகுல் காவல் நிலையத்திற்கு உள்பட்ட பி பைனோம் கிராமத்துக்குள் பிற்பகல் 3 மணியளவில் ஏகே ரைபிள்கள், எஸ்எல்ஆர், இன்சாஸ், பாயிண்ட் 303 ரைபிள்களுடன் 900-1000 பேர் கொண்ட கும்பல் நுழைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Meitei இளைஞர் அமைப்புகள், Meetei Leepun உள்ளிட்டவற்றை சேர்ந்த அந்த கும்பல், கிராமத்துக்குள் இருந்த சுமார் 25 வீடுகளையும் கட்டிடங்களையும் சூறையாடியதாகவும், பின்னர் தீவைத்து எரித்ததாகவும் எப்ஐஆரில் பதியப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்த பணம், தளவாடங்கள், மின்னணு பொருட்கள், உணவு தானியங்கள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கும்பலுக்கு அஞ்சி அருகில் உள்ள காடுகளுக்கு தப்பியோடி தலைமறைவாக இருந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள், 2 ஆண்கள் நோங்போக் செக்மாய் போலீசார் மீட்டுள்ளனர்., காவல்நிலையத்துக்கு செல்லும் வழியில் வன்முறை கும்பல் அவர்களை வழி மறித்ததாக எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் போலீசாரை மிரட்டி அவர்களிடம் இருந்து 5 பேரையும் அந்த கும்பல் இழுத்து வந்துள்ளது. அதில் 56 வயது மதிக்கத்தக்க ஆணை முதலில் கொன்றதாகவும், 21 வயது மதிக்கத்த பெண்ணை மற்ற 3 பேர் முன்னிலையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அந்த பெண்ணின் 19 வயது தம்பி தடுக்க முயன்றதால், அந்த இளைஞனையும் வன்முறை கும்பல் கொடூரமாக கொன்றுள்ளதாக எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட அந்த 3 பெண்களும், வன்முறை கும்பலிடம் இருந்து தப்பியோடி அருகில் கிராமத்தில் தஞ்சமடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் போலீசில் புகார் தந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், ராணுவத்தில் பணியாற்றியவர். அசாம் படைப்பிரிவின் வீரராக பணியாற்றிய அவர், கார்கில் போரில் தேசத்திற்காக போராடியதாகவும், இந்தியாவின் அமைதி காக்கும் படையின் ஒரு பகுதியாக இலங்கையில் பணியாற்றியதாகவும் தெரிவித்துள்ளார். நாட்டை பாதுகாக்க போராடிய தன்னால், ஓய்வுக்குப் பிறகு, தனது குடும்பத்தையும், தன் மனைவியையும் பாதுகாக்க முடியாமல் போனதாக வேதனை தெரிவித்துள்ளார்.