சிவகங்கை : முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் இணைந்து 18 வயது நிரம்பியும் முதிர்வுத் தொகை கிடைக்காத பயனாளிகள் வரும் அக்டோபர் 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
 
1992ம் ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டம் முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம். தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.
 
முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டப்படி ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.25,000, இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.50,000 வழங்கக்கப்படும். இந்தத் தொகை மொத்தமாக, அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
 

இந்த வைப்புத் தொகை ஒவ்வொரு ஐந்தாண்டு முடிவிலும் புதுப்பிக்கப்பட்டு 18 வது நிறைவடைந்ததும், அப்போதைக்குரிய திரட்டப்பட்ட வட்டி விகிதத்துடன், கல்வி ஊக்கத் தொகையுடனும் கூடிய நிலை வைப்புத் தொகையின் முதிர்வுத் தொகை காசோலையாக பெறப்பட்டு அக்குழந்தைகளுக்கு மாவட்ட சமூக நலத்துறை மூலம் வழங்கப்படும்.

 

சமூக நலன்துறையால் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் தமிழ்நாட்டில் அதிக வரவேற்பை பெற்ற திட்டங்களில் ஒன்று. இன்றும் பெண் குழந்தைகள் பிறந்தால் மக்கள், முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் இணைவது அதிகமாகவே உள்ளது. ஆதார் எண்ணை இணைத்து பெண் குழந்தைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

 
தகுதிகள்: பெற்றோரில் ஒருவர் 35 வயதிற்குள் அரசாங்க மருத்துவமனையில் கருத்தடை செய்ததற்கான சான்று அளிக்க வேண்டும். பெண் குழந்தை மட்டுமே இருக்க வேண்டும். ஆண் வாரிசு இருக்கக் கூடாது. வருமானச் சான்று ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும். இரண்டாவது குழந்தைக்கு 3 வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆதார் எண் கட்டாயமாகும்
 

இதனிடையே சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தில் 1997 முதல் 2001-ம் ஆண்டு வரை பதிவு செய்து, 18 வயது நிரம்பிய முதிர்வுத்தொகை கிடைக்கப்பெறாமல் உள்ள பயனாளிகளுக்கு முதிர்வுத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

 

சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இத்திட்டத்தில் பதிவு செய்து 18 வயது நிரம்பிய முதிர்வுத்தொகை கிடைக்கப்பெறாமல் உள்ள பயனாளிகள், உரிய ஆவணங்களான, வைப்புநிதிப்பத்திரம் அசல், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், பயனாளியின் வங்கிக்கணக்கு புத்தகம் நகல், பயனாளியின் (தாய் மற்றும் மகள்) புகைப்படம் ஆகியவைகளுடன், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர்களிடம், வருகின்ற 25-ந் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.